Sunday, December 27, 2009

இந்தியா அழைக்கிறது : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்!


இந்திய தேசிய ராணுவத்தின் சுப்ரீம் கமாண்டர்!







"தாக்குண்டால் புழு கூட
தரை விட்டு தீ துள்ளும்
கழுகு தூக்கினும் குஞ்சுக்காக
துடித்து எழும் கோழி
சிங்கம் மூர்க்கமாய் தாக்கும் போது
முயல் கூட திருப்பித்தாக்கும்
சாக்கடை புழுக்கள்ல்ல நாங்கள்
சரித்திரத்தின் சக்கரங்கள்"

அதோ அந்த நதியின் கரைக்கு அப்பால், அந்த அடர்ந்த காடுகளுக்கும் பின்னால், நம் கண்களில்படும் அந்த மலைகளுக்கும் பின்னால் நமக்காக உறுதியளிக்கப்பட்ட அந்த பூமி உள்ளது - எந்த மண்ணில் இருந்து நாம் உயிர்பெற்றோமோ - அந்த பூமியை நோக்கி நாம் திரும்புகிறோம். புறப்படுங்கள், இந்தியா அழைக்கிறது... ரத்தம் ரத்தத்தை அழைக்கிறது. கிளர்ந்தெழுங்கள், உங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். நம்மை அடிமையாக்கிய எதிரிகளின் படைகளை கிழித்துக் கொண்டு நமது பூமிக்கு பாதை அமைப்போம் அல்லது இறைவனின் சித்தம் வேறானால் வீரர்களுக்குரிய தியாக மரணத்தை தழுவுங்கள். நமது கடைசி மூச்சில் டெல்லிக்கு செல்லும் நமது பாதைக்கு முத்தமிட்டுவிட்டுச் சாவோம். டெல்லிக்கு செல்லும் பாதை, விடுதலை நோக்கிய பாதை.... சலோ டெல்லி


பிப்ரவரி 4, 1944 ஆம் ஆண்டு ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து இந்தியாவை விடுவிக்க புறப்பட்ட இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு இடையே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய எழுச்சியுரை இது!

இளம் வயதிலிருந்தே கல்வி ஆர்வம் மிக்க சிறந்த மாணவராகத் திகழ்ந்த சுபாஷ் சந்திர போஸ், ஸ்ரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரின் ஆன்மீக அழைப்புக்களால் ஈர்க்கப்பட்டார். சன்யாசத்தை மேற்கொள்ள முடிவெடுத்தார். `மக்கள் சேவையில் இறைவனை காண்' என்ற விவேகானந்தரின் அறிவுரையால் ஈர்க்கப்பட்டு அவ்வாறே பணியாற்றியும் வந்தார்.

ஸ்ரீ அரவிந்தர் எழுத்துக்கள் சுபாஷ் சந்திர போஸுக்கு தேசப் பற்றை ஊட்டியது மட்டுமின்றி, தேச சேவையிலும் நாட்டத்தை ஏற்படுத்தியது. பின்னாளில் அவர் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து தேச விடுதலை போராட்டத்தில் ஈடுபட, ஸ்ரீ அரவிந்தர், ஆர்யா எனும் தனது பத்திரிகையில் எழுதிவந்த கட்டுரைகளே காரணமாக அமைந்தது.

"உங்களில் சிலரை உன்னத மனிதர்களாக காண விரும்புகிறேன்; உங்களுக்காக அல்ல, இந்திய திருநாட்டை உன்னத நாடாக உயர்த்தும் உன்னத மனிதர்களாகவே காண விரும்புகிறேன். உங்களுடைய தாய்நாட்டின் சேவைக்காக உங்களை அர்ப்பணியுங்கள். அவளுடைய வளத்திற்காக செயலாற்றுங்கள், அவளுடைய இன்பத்திற்காக நீங்கள் துயரத்தை தாங்குங்கள்" என்ற ஸ்ரீ அரவிந்தரின் வார்த்தைகள் சுபாஷின் உள்ளத்தில் தேசத்திற்காக பணியாற்ற வேண்டும் என்ற தீயை வார்த்தது.

ஐ.சி.எஸ். முடித்து 1921 ஆம் ஆண்டு, தனது 23 வது வயதில் மீண்டும் இந்தியா வந்த சுபாஷ் சந்திர போஸ், ஐ.சி.எஸ். அதிகாரியாக பணியில் சேரவில்லை. ஆனால் தேச விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார்.


அடுத்த ஒன்பது ஆண்டுகள் சுபாஷ் சந்திர போஸ் ஆற்றிய பணி இந்தியாவிலும், அயல் நாடுகளிலும் அவரை மாபெரும் தலைவராக உயர்த்தியது.

இந்திய விடுதலைக்கு ஆதரவு தேடி 1938 ஆம் ஆண்டு அவர் ஐரோப்பாவில் பயணம் செய்துக் கொண்டிருந்தபோது, இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக சுபாஷ் சந்திர போஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

41-வது வயதிலேயே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுபாஷ் சந்திர போஸ், 1939 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், மகாத்மா காந்தி நிறுத்திய பட்டாபி சீதாராமையாவை தோற்கடித்து, மீண்டும் தலைவரானார்.

பட்டாபி சீதாராமையாவின் தோல்வி தனது தோல்வி என்று காந்தி கூறினார். இது நேதாஜியை வருத்தத்தில் ஆழ்த்தியது.

மத்திய பிரதேச மாநிலம் திரிபூரியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவிற்கு அடுத்த ஆறு மாதங்களில் பிரிட்டிஷ் அரசு முழு விடுதலை அளித்துவிட்டு வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற நேதாஜி முயன்றார். ஆனால் காந்தியவாதிளால் அத்தீர்மானம் புறக்கணிக்கப்பட்டது.

அஹிம்சை மீது போஸிற்கு நம்பிக்கை இருந்த போதும் , இது நம் குடும்பத்திற்குள் வரும்
பிரச்னைகளுக்கும், உள்நாட்டு பிரச்சனை களுக்கும் மட்டுமே பொருந்தும் என்றும் , எதிரிகளை , நம்மை அடிமை படுத்துபவர்களை நம் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற கருத்து கொண்டவராக விளங்கினார்.

காந்திஜிக்கும், நேதாஜிக்கும் இடையே இவ்வாறு ஏற்பட்ட பல மோதல்களின் விளைவாக காங்கிரஸ் தலைவர் பதவியை கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டின் போது துறந்தார் நேதாஜி. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே ஃபார்வர்ட் பிளாக் (முற்போக்கு அணி) தொடங்கினார்.


பாரத திருநாட்டை 200 ஆண்டுக் காலம் அடிமைத் தனையால் பிணைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இராணுவ ரீதியாக போராடிய ஈடிணையற்ற இந்தியத்தலைவர் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் .

இந்திய விடுதலை போராட்டத்தின் இறுதி கட்டத்தில், இரண்டாவது உலகப் போர் ஏற்பட்டிருந்த அன்றைய உலக சூழலை கருத்தில் கொண்டு, சர்வதேச சக்திகளின் துணையுடன் அன்னிய மண்ணில் களம் அமைத்து அவர் நடத்திய விடுதலை போர், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை கதிகலங்க அடித்தது.

அமைதியான, சாத்வக போராட்டங்களால் மட்டுமின்றி, ஆயுதம் தாங்கிய வீர வழியில் இந்தியாவிற்கு உள்ளேயும், இந்தியாவிற்கு வெளியேயும் இருந்து நடத்தப்பட்ட போராட்டங்களால் (போர்களால்) பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிர்பந்தங்களால்தான் இந்தியாவிற்கு விடுதலை கிடைத்தது என்பதே வரலாறு நமக்கு காட்டிவரும் உண்மையாகும்.

இந்தியாவிற்கு இப்படியும் போராடத் தெரியும் என்பதை உலகத்திற்கு உணர்த்தியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

இன்றைய சுயநல அரசியலில் இவரின் பெருமைகளை மக்களிடம் கொண்டு செல்ல ஆட்சியாளர்கள் தவறி விட்டார்கள் என்பதே முற்றிலும் உண்மை .

உண்மையான வீரனை, தேச பக்தியே மூச்சாக கொண்ட மாமனிதர்களின் பெருமையை மறைக்க எவராலும் முடியாது .

உங்களின் நேரத்தில் ஒரு சில மணி துளிகளை ஒதுக்கி , இந்த மாமனிதரை பற்றிமுழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

note: all contents/pictures gathered from several websites.







பிறப்பு: ஜனவரி 23, 1897

மறைவு: ஆகஸ்ட் 18 1945






No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம் எனக்கு மேலும் எழுத உற்சாக மூட்டும்...