Sunday, July 24, 2011

"நன்றி கடன்"

நடப்பு உலகில், பெரும்பாலான வீடுகளில், பிள்ளைகள் படிப்பு, வேலை போன்ற காரணங்களுக்காக பெற்றோரை பிரிந்து இருப்பது வழக்கம். ஆனால், காரணம் எதுவாக இருந்தாலும்,பெற்றோரின் வயோதிக நிலைமையில் அவர்களை பாதுகாக்கும், மகிழ்விக்கும் பெரிய பொறுப்பு ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் உண்டு என்பதை உணர்த்தவே இந்த பதிவு.

சிறிய கதை,



ஊருக்கு வெளியே, மலை அடிவாரத்தில், ஒரு பெரிய மரம் இருந்தது. அதன் அருகில், ஒரு சிறிய குடும்பம் வசித்து வந்தது. அந்த வீட்டில் வசித்த சிறுவன் பெரும்பாலான நேரம் மரத்தின் அருகிலேயே விளையாடுவதும், கிளைகளில் அமர்வதும், காய் கனிகளை உண்பதும், அதன் நிழலில் ஓய்வெடுபதும், அவன் கழித்த பொழுதுகள் அதிகம்.

காலம் ஓடியது, சிறுவன் வளர்ந்துவிட்டான். இப்போதெல்லாம் மரத்தடிக்கு அவ்வளவாக வருவது இல்லை.இதனால் மரம் வருந்தியது. ஒரு நாள் வாடிய முகத்துடன் வந்தவனை "வா விளையாடலாம்" என்று ஆசையுடன் அழைத்தது மரம். அவன், எனக்கு இப்போது உன்னுடன் விளையாடும் வயதில்லை. நான் மேல் படிப்பு படிக்க வேண்டும். நல்ல உடைகளும், காலணிகளும் வாங்க வேண்டும். அவற்றுக்கு வசதி வேண்டும் என்றான் ஏக்கத்துடன்.

உடனே மரம், 'என்னால் இவற்றை எல்லாம் உனக்கு கொடுக்க முடியாது. ஆனால், நீ எனது காய் - கனி'களை பறித்துகொண்டு போய் விற்று, உன் தேவைகளை பூர்த்தி செய்துகொள் என்றது. மகிழ்ச்சியுடன் மரம் கொடுத்தவற்றை எல்லாம் எடுத்துகொண்டு ஓடினான். அதன் பிறகு வெகு நாட்கள் அவன் வரவேயில்லை. மரமோ மிகவும் வருந்தியது.

ஒரு நாள் மீண்டும் வந்தான். 'இப்போதும் உன்னுடன் விளையாட வரவில்லை. நான் தொழில் செய்து பெரும் செல்வம் சேர்க்க வேண்டும். அதற்கு என்னிடம் பணம் இல்லை என்று தன் கஷ்டத்தை பகிர்த்து கொண்டான். உடனே மரம், 'பறந்து விரிந்த எனது கிளைகளை வெட்டி எடுத்து போய். தொழில் தொடங்கு !' என்று சந்தோஷமாக தனது கிளைகளை வெட்டிக்கொள்ள அனுமதித்தது.'

அதன் பிறகு பல காலம் அவன் வரவேயில்லை.பிறகு ஒரு நாள் வந்தான். 'எனக்கு இப்போது ஒரு குடும்பம் இருக்கிறது. பல பொறுப்புகள் இருக்கின்றன, நாங்கள் வசிக்க ஒரு வீடு வேண்டும். உன்னால் உதவ முடியுமா? என்று கேட்டான்.'

'தாராளமாக என் அடி மரத்தை வெட்டி எடுத்துச்செல், வீடு வசதிகளுடன் சந்தோசமாக இரு' என்றது மரம். மீண்டும் பல காலம் வராமல் இருந்த அவன், வெகு காலம் கழித்துத் திரும்பி வந்தான். அவனை பார்த்த மரத்திற்கு பெரும் மகிழ்ச்சி. என்றாலும். 'காய்ந்து கொண்டு இருக்கும் எனது வேர்களை தவிர, இப்போது உனக்கு கொடுக்க வேறு எதுவும் இல்லையே என்று வருந்தியது மரம்.

உடனே, 'எனக்கு இப்போது எதுவும் தேவை இல்லை.நிம்மதி கிடைத்தால் போதும்' என்றான் அவன்.

'நிம்மதி பெற இதைவிட சிறந்த இடம் இல்லை. எனது வேர்களில் தலை வைத்து படுத்து ஆறுதல் அடைவாயாக!' என்றது மரம் கண்ணீருடன்.




இந்த கதையில் வரும் மரத்தை போன்றவர்கள் நம் பெற்றோர். தங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் நமக்காக மனமுவந்து அளிப்பவர்கள். ஆனால் நம்மில் பலர், 'தனது தேவைக்காக மட்டும் மரத்தை உபயோகப்படுத்திகொண்ட' அந்தச் சிறுவனை போன்றவர்கள்.

பிள்ளைகளின்,மீது பாசத்தைப் பொழிவது உயிரினங்களின் இயற்கை நியதி. 'நான் உனக்கு இப்போது இதை கொடுக்கிறேன், பிறகு, நீ அதை எனக்குத் திருப்பி கொடு' என்பது வியாபாரம்.
'என்னிடம் இருப்பதை எல்லாம் நான் உனக்கு அளிக்கிறேன், அதன் மூலம் நீ பயன் அடைந்து வாழ்வதுடன், உன் சந்ததிக்கும் அதைப் பன்மடங்காக அளித்து அவர்களையும் வாழ்விப்பாயாக' என்பது வாழ்கை.

'நமக்காக, எல்லாவற்றையும் தியாகம் செய்து, நம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோருக்கு அன்புடன் அன்புடன் அன்புடன் சேவை செய்வது நமது தலையாய கடமை.'

'ஆனால், நாம் எவ்வளவுதான் செய்தாலும் அவை, அவர்கள் நம் மீது பொழிந்த அன்புக்கும் பாசத்துக்கும் ஒருபோதும் ஈடாகாது!'

உங்களது பரிவையும் பாசத்தையும் பெற்றோரிடமும் அவசியம் காட்டுங்கள். அதே உணர்வை குடும்பத்தினரிடமும், மற்றவர்களிடமும் காட்டப் பழகுங்கள்.

இதைவிட தாய் - தந்தையர்க்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன் வேறு இல்லை.


மீண்டும் சந்திப்போம்

இப்படிக்கு
JP

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம் எனக்கு மேலும் எழுத உற்சாக மூட்டும்...